SBI KCC கிசான் கிரெடிட் கார்டு, WWW.TRENDSIN11THHOUR.COM

SBI பயிர்க்கடன் KCC ( கிசான் கிரெடிட் கார்ட்)

Financial and economical awareness: நிதி மற்றும் பொருளாதார விழிப்புணர்வு குறித்த பல உபயோகமான தகவல்களை உங்களுக்கு பகிர்ந்து வருகிறோம் இன்று விவசாய பயிர் கடன் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

நோக்கம்:

பயிர்க் கடன் குறித்த அனைத்து தகவல்களையும் தமிழில் தருவதே இந்த பதிவின் நோக்கம்.

முதன் முதலில் 1998 ஆம் ஆண்டு கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

விவசாய பயிர்க் கடன் வாங்க தகுதிகள் என்ன ?

பொதுவாக கூறவேண்டுமானால் அனைத்து சிறு, குறு, பெரு விவசாயிகள் அனைவரும் விவசாயக் கடன் வாங்க தகுதி உடையவர்கள்.

யார் விவசாய கடனை வாங்கலாம் என்பதை விளக்கமாக இப்பொழுது பார்க்கலாம்.

1. விவசாய நில உரிமையாளராக தனியாகவும் கூட்டாகவும் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும் விவசாய கடன் வாங்க தகுதி உள்ளவர்கள்

2. நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் ( எழுத்துப்பூர்வமாக மற்றும் வாய்வழி குத்தகை முறையில் விவசாயம் செய்பவர்கள் தகுதியுடையவர்கள்)

3. சுய உதவி குழுக்களாக விவசாயம் செய்பவர்கள்.

4. குழுக்களாக JLG அமைப்பின் படி இணைந்து விவசாயம் செய்யும் விவசாயிகள். (இந்த JLGயை குறித்து தனியாக மற்றொரு பதிவில் பார்க்கலாம்)

எந்த செலவுகளுக்கு பயிர்க் கடன் வாங்கலாம் ?

ஒரு விவசாயிக்கு பலவிதமான செலவுகள் ஏற்படும் அவற்றில் குறிப்பிட்ட செலவுகளுக்கு மட்டும் KCC கடன் வாங்க முடியும், அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இப்பொழுது பார்க்கலாம்.

1. பயிர் சாகுபடி செய்வதற்கான குறுகிய கால தேவைகளுக்கு குறுகிய கால பயிர் கடன் பெறலாம்

2. பயிர் சாகுபடிக்கு பிறகு ஏற்படும் செலவுகளுக்கு

3. விவசாயிகளின் வீட்டு நுகர்வு தேவைகளுக்கு

4. கால்நடை பராமரிப்பு, பறவை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் பல விவசாய துணை செயல்பாடுகளுக்கு கடன் பெறலாம்.

5. விவசாய உபகரணம் இயந்திரங்கள் வாங்குவதற்கான கடன் ( குறிப்பு: இந்த உபகரண இயந்திரக் கடனை ஒரு வருடத்துக்குள் திரும்ப செலுத்த வேண்டும்)

பயிர்க்கடன் அளவு :

சுருக்கமாக கூற வேண்டுமானால் பயிர் கடனுக்கு குறைந்தது அல்லது அதிகப்படி என்ற எந்த அளவும் இல்லை.

உங்கள் நிலத்தின் அளவு சாகுபடி செய்யும் பயிர் வகை, உங்கள் மாவட்டம் இதைப் பொறுத்து பயிர்க்கடன் தொகை நியமிக்கப்படும். அதிகப்படியாக எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

பயிர்க் கடனை வருடாவருடம் தவணை தவறாமல் சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி பயிர்க்கடனை புதுப்பித்து வந்தாள் ஒவ்வொரு வருடமும் 10 % கடன் தொகை அதிகரித்து தரப்படும்.

இதனால் விவசாயிகள் வருடாவருடம் ஏற்படும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கடன் தொகையையும் அதிகரித்து வாங்கிக் கொள்ளலாம்.

பயிர்க் கடன் காலம் ஐந்து ஆண்டுகள்.

ஒவ்வொரு பயிருக்கும் கடன் தொகை வேறுபடுகிறது, மாவட்டத்துக்கு மாவட்டம் ஒரே பயிருக்கு கடன் தொகை வேறுபடும் . ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு மாவட்டத்துக்கு கடன் தொகையை வெளியிடும் இதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் finger, hand, pointing-1294200.jpg பயிர்க்கடன் அளவு என்ன hand, finger pointing, pointing-1923005.jpg

பயிர்க்கடன் எனக்கு எவ்வளவு கிடைக்கும் ?.

(விவசாய நிலம் எத்தனை ஏக்கர் X பயிர்க்கடன் அளவு என்ன )+ 10 % பயிர் சாகுபடி செய்வதற்கான செலவுகளுக்கு/ சாகுபடிக்கு பிறகு ஏற்படும் செலவுகளுக்கு + 20% விவசாயிகளின் வீட்டு நுகர்வு தேவைகளுக்கு + காப்பீட்டுத் தொகைக்கு செலவுகள். இவை அனைத்தும் சேர்த்த தொகை தான் நீங்கள் பயிர் கடனாக பெறுவீர்கள்

எடுத்துக்காட்டாக :

உங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிறது வாழை பயிர் செய்கிறீர்கள், வாழை பயிருக்கு அரசாங்கம் தரும் கடன் அளவு 57500/- (மேலே உள்ள “பயிர்க் கடன் அளவு என்ன” என்ற நீல நிற எழுத்துக்களை கிளிக் செய்து வாழை பயிருக்கு எவ்வளவு கடன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்)

(ஏக்கர் 5 X Rs. 57500) =287500

287500 க்கு 10% =28750

287500 க்கு 20% = 57500

ஆக மொத்தம்: 287500+ 28750+57500 =373750

தோராயமாக 370000/- ரூபாய் நமக்கு கடன் கிடைக்கும்.

சரியான கடன் தொகையை தெரிந்து கொள்ள வங்கியை தயவு செய்து தொடர்பு கொள்ளவும் இது ஒரு மாதிரி கணக்குதான்.

மேற்சொன்ன பயிர்க்கடன் கணக்கிடும் முறையை தெரிந்து கொள்ள ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆதார ஆவணம் இந்த கட்டுரையில் முடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிர் கடன் திரும்பச் செலுத்தும் கால அளவு என்ன ?

விவசாய பயிர்க் கடன் 12 மாதங்களுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் பயிர்க் கடன்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடன் பத்திரங்களை புதுப்பிக்க வேண்டும். வங்கியில் கடன் தொகையையும் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகரித்து தருவார்கள். புதிய அதிகரிக்கப்பட்ட கடன் தொகைக்கு ஏற்ப பத்திரங்களை நாம் பதிவு செய்து தர வேண்டும்.

குறிப்பு: பயிர்க் கடனை புதுப்பிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை . பயிர்க்கடன் அனைத்தும் சுழல் நிதியை அல்லது நடப்புக் கணக்கு போல் தரப்படும் எனவே ஒவ்வொரு 12 மாதத்திற்குள் உங்கள் மொத்த கடன் தொகைக்கு(கடன் தொகை +வட்டி ) இணையான அளவு பணப்பரிவர்த்தனை உங்கள் பயிர்க் கடன் கணக்கில் நடைபெற்றிருக்க வேண்டும்.

இத்துடன் கவனிக்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான காரியம் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை உங்கள் பயிர்க்கடன் ஆவணத்தை உயிர்ப்பு அல்லது புதுப்பிக்க வேண்டும். நீங்கள் பயிர்க்கடனை புதுப்பிக்கும் பொழுது இந்த உயிர்ப்பு கடிதத்தை தவறாமல் கேட்டு பூர்த்தி செய்ய வேண்டும் இப்படி செய்வதால் உங்கள் வங்கி நன்னடத்தை மதிப்பெண்ணை அதிகரிக்கும். இது பின்னாட்களில் நீங்கள் பல கடன்களை வாங்குவதற்கு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

பயிர் கடனுக்கு அடமானம் என்ன ?

முதன்மை அடமானம்.

அனைத்து பயிர் கடன் களுக்கும் பயிர்கள் தான் முதன்மை அடமானம்.

இணை பாதுகாப்பு அடமானம்:

முதலில் இணை பாதுகாப்பு அடமானம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விவசாய நிலம் பொதுவாக இணை பாதுகாப்பு அடமானமாக தரப்படும். விவசாய நில உரிமையாளர்கள் விவசாய நிலத்தை வங்கியின் பெயரில் அடைமான பத்திரம் பதிந்து தரவேண்டும்.

விவசாய நிலங்களுக்கு மாற்றாக NSC பாண்டுகள் அல்லது வங்கி டெபாசிட் களையும் அடமானமாக தரலாம்.

விவசாய நிலத்தை அடமானமாக வைக்காமல் பயிர் கடன் வாங்க முடியுமா?

நம்மில் பலரும் கேட்கும் கேள்வி நமது விவசாய நிலத்தையோ அல்லது மற்றவர் எதையும் அடமானமாக வைக்காமல் விவசாய பயிர்க் கடன் வாங்க முடியுமா என்று. இதோ பதில்.

1 ) ரூ.1,60,000/- க்கும் சமமாகவோ அல்லது குறைவாகவோ விவசாயக் கடன் வாங்கினால் அதற்காக எந்த அடமானமும் தர வேண்டிய அவசியமில்லை.

2 ) அமைப்பு முறையாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்பவராக இருந்தால்  ரூ.3,00,000/- வரை விவசாய கடன் பெறுவதற்கு எந்த அடமானமும் தர வேண்டிய அவசியமில்லை. (அமைப்பு முறையாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் என்றால் என்ன என்பதை குறித்து விளக்கமாக வரும் சில பதிவுகளில் தருகிறேன்)

பயிர் கடன் வாங்க தேவைப்படும் ஆவணங்கள் என்ன ?.

1 ) (ID Proof) அடையாள அட்டை: PAN பேன் கார்டு ,வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம்,  ஆதார் அட்டை.

2 ) (Address proof) முகவரி அட்டை: ஓட்டுனர் உரிமம்,  ஆதார் அட்டை.

3 ) 2 புகைப்படம் ( மிக சமீபத்தில் எடுத்ததாக இருக்க வேண்டும்)

4 ) சிட்டா/பட்டா, அடங்கல் , நில பத்திரங்கள்.

கடன் நடைமுறைகள் ? :

ரூபாய்.1,60,000/- வரை கடன் பெறுவதற்கு மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் போதும்.

ரூபாய்.1,60,000/- க்கு அதிகமாக கடன் பெற விரும்புபவர்கள் தங்கள் நில (original ) பாத்திரங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். 31 ஆண்டுகளுக்கு வில்லங்க சர்டிபிகேட்(EC) எடுத்து தர வேண்டும். வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழக்கறிஞரிடம் லீகல் ஒப்பீனியன் (legal opinion) வாங்க வேண்டும் அதற்கான செலவையும் நாம்தான் ஏற்க வேண்டும். இதற்கு அடுத்து வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரிடம் நிலத்திற்கான மதிப்பீட்டை பெற வேண்டும் இதற்கான செலவையும் நாம்தான் ஏற்க வேண்டும்.

உங்கள் பத்திரங்கள் வங்கி வழக்கறிஞர் தந்த அறிக்கையின்படி எந்த வில்லங்கமும் இல்லை என்றால் அந்த நிலத்தின் மதிப்பிற்கு ஏற்ப கடன் தொகையை கணக்கிட்டு உங்களுக்கு வழங்குவார்கள். இப்படி அனைத்து ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பித்து கடன் விண்ணப்ப படிவத்தில் கையொப்பம் இட்ட பின் 7 முதல் 10 நாட்களுக்குள் நமக்கு கடன் தந்து விடுவார்கள். இவ்வாறு கடன் பெற்றபின் வங்கியில் கடன் பத்திரத்தில் நாம் கையொப்பமிட வேண்டும் .

கடன் பத்திரத்தில் கையொப்பம் இட்ட பின் என்ன செலவுகள் ஏற்படும்?.

கடன் நடைமுறைக்கான செலவு (loan processing charges) , ஸ்டாம்ப் செலவு , இன்ஸ்பெக்சன் சார்ஜ், இந்த சிறிய அளவிலான தொகையை நாம் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

இதன்பிறகு நமது நில பத்திரங்களை வங்கியின் பெயருக்கு (Mortgage) பதிவு செய்து தர வேண்டும் அதற்கான செலவையும் நாம் ஏற்க வேண்டும்.

இது தவிர ஒவ்வொரு ஆண்டும் பயிர்க் கடனை புதுப்பிக்கும் பொழுது கடன் வைப்பு செலவு, (கீப்பிங் சார்ஜஸ்), ஆய்வு செலவு (இன்ஸ்பெக்சன் சர்ஜஸ்), புதுப்பிக்கும் செலவு (ரெனிவெல் சார்ஜஸ்) போன்றவற்றை செலுத்தவேண்டும்.

பயிர்க் கடனை எப்பொழுது திரும்ப செலுத்த வேண்டும் ?

விவசாய பயிர்க் கடன்கள் ஒவ்வொரு ஆண்டுக்கு ஒருமுறை திரும்ப செலுத்த வேண்டும் அதாவது கடன் பெற்ற தொகை வட்டி மற்றும் மேலே குறிப்பிட்ட செலவினங்களையும் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் நம் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இங்கு ஒரு முக்கியமான தகவலை கூற விரும்புகிறேன் ஒவ்வொரு ஆண்டும் வட்டி மற்றும் மேலே குறிப்பிட்ட செலவினங்களையும் வங்கிக்கு செலுத்த வேண்டும் , வாங்கிய கடன் அசல் தொகையை ஒவ்வொரு ஆண்டும் பயிர்க்கடனை புதுப்பிக்கும் பொழுது செலுத்த வேண்டிய அவசியம் இல்லை . நீங்கள் வாங்கிய கடன் தொகைக்கு இணையான அளவு பணப்பரிமாற்றம் உங்கள் பயிர் கடன் கணக்கில் நடைபெற்று இருந்தால் போதும். அதாவது உங்கள் பயிர்க்கடன் கணக்கை ஒரு சுழல் நிதி கணக்கை போல நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் இன்னும் விளக்கமாக கூற வேண்டுமானால் பயிர் கடனில்

 பணத்தை செலுத்தி விட்டு அதை மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் ஏடிஎம் (ATM) அல்லது காசோலை பயன்படுத்தி உங்கள் பயிர் கடனில் இருந்து பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். நாம் தினம் வரவு செலவுகளை பயிர்க்கடன் கணக்கிலேயே பரிமாற்றம் செய்தால் வாங்கிய அசல் தொகை அளவுக்கு அதிகமான தொகையை ஒரு வருடத்துக்குள் நம்மால் பரிமாற்றம் செய்துவிட  முடியும். அதாவது ஒரே தவணையாக மொத்த தொகையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை, கடன் வட்டி மற்றும் இதர செலவுகள் மட்டும் செலுத்தினால் போதும். வாங்கிய கடனில் அசல் தொகை திரும்ப செலுத்த வேண்டாம் ஆனால் அசல் தொகை அளவுக்கு ஒரு வருடத்திற்குள் நம் கணக்கில் வரவு செலவு இருந்தாலே போதுமானது. இது விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்பது வங்கிக்கு வெளியே கந்துவட்டி வாங்கியவர்களுக்கு தான் புரியும். (குறிப்பு: ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை பயிர்க் கடனை முழுமையாக திரும்பச் செலுத்த வேண்டும் ) அதுமட்டுமல்ல பயிர்க்கடன் சுழற்சி கணக்காக தரப்படுகிறது, பெரிய வியாபாரம் செய்பவர்கள் மட்டுமல்ல விவசாயிகளுக்கும் இந்த சுழற்சி கணக்கு பயிர்க்கடன் வடிவத்தில் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. இதற்காக வங்கியில் இருந்து ATM- RUPAY CARD, காசோலைகளை பயிர் கடனுக்கு என்று தனியாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம் எப்படி ஒரு விவசாயி வியாபாரியைப் போல் பயிர்க்கடன் கணக்கில் வரவு செலவு வைக்க முடியும், என்று சந்தேகம் எழுவது இயல்பு.

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளது பெரும்பாலும் அனைத்து தொழிலாளர்களும் 100 நாள் வேலை செய்வதற்காவது ஒரு வங்கி கணக்கு வைத்திருப்பார்கள் அந்த வங்கி கணக்குகளில் உங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களுக்கு, விவசாய கூலி தொகையை அவர்கள் ஜன்தன் கணக்கிலோ, 100 நாள் வேலை கணக்கிலோ நீங்கள் செலுத்தலாம், இதற்கு உங்கள் பயிர்க்கடன் கணக்கை பயன்படுத்தலாம், விவசாய நிலத்தில் உற்பத்தி செய்த விவசாய பொருட்களை விற்கும் போது, கையில் பணம் பெறாமல் உங்கள் விவசாய கடன் கணக்கில் அந்த தொகையை பெறுவதன் மூலம் விவசாய கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். இது இன்றைய காலகட்டத்தில் மிக மிக எளிதாகிவிட்டது எனவே விவசாயிகள் அரசாங்கம் தரும் அனைத்து சலுகைகளையும் தெரிந்துகொண்டு உங்கள் கணக்குகளில் பண பரிமாற்றங்களை செய்வது உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கடனை செலுத்த தவறினால் என்ன நடக்கும் ?.

இது கடனை திரும்ப செலுத்தாதவர்களுக்காக மட்டும் இந்த தகவல்.

நம்மில் பல விவசாயிகள் விவசாயக்கடன் என்றாலே தள்ளுபடி ஆகிவிடும் நாம் திரும்ப செலுத்த வேண்டியதில்லை என்று எண்ணம் கொண்டுள்ளார்கள் இது எதற்கு இணையானது தெரியுமா பொன் முட்டையிடும் வாத்தை ஒரே நாளில் அழித்து விடுவதற்கு சமம்.

நம் கடனை மிகச்சரியாக செலுத்தினால் 7% வட்டி யிலேயே நாம் அடுத்த வருடமும் கடனை பெற முடியும் அதுமட்டுமல்லாது அபராத வட்டி கூட்டு வட்டியாகாமல் தடுக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் நாம் செய்யும் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் CIBIL என்ற அமைப்பில் பதிவாகிக் கொண்டே இருக்கும். இது நமக்கு பொருளாதார அடிப்படையிலான மதிப்பை தரும். நாம் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் விட்டாலும் அல்லது காலதாமதமாக செலுத்தினாலும், நம் கடனை வாராக்கடன் என்று பதிவு செய்துவிடும், அதன் பிறகு நமக்கு எந்த நிதி நிறுவனமும் கடன் தருவதற்கு முன் வர மாட்டார்கள். எனவே கடனை சரியான நேரத்தில் திரும்ப செலுத்துவது வருங்காலங்களில் நம் பொருளாதார தேவைக்கு ஏற்ப கடன் பெறுவதற்கு உறுதுணையாக அமையும்.

தங்களது கடனை சரியாக திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு CIBIL மதிப்பெண்கள் அதிகமாக இருக்கும், எனவே அனைத்து வங்கிகளும் கடன் தர முன்வரும்.

மேற்கண்ட தகவல்களை சேகரித்த மூல ஆதார ஆவணங்கள் என்ன ?

RBI CIRCULAR : ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆதார ஆவணம்

SBI KCC APPLICATION FORM : SBI பயிர்க் கடன் விண்ணப்ப படிவம்

SBI BANK WEBSIT: SBI வங்கியின் இணையதள பக்கம்

Leave a Comment

Your email address will not be published.